புதுடெல்லி: தமிழ்நாடு என்று கூறாமலும், தமிழக தலைவர்களைப் பற்றி உரையில் படிக்காமல் புறக்கணித்த கவர்னரின் செயல் குறித்து ஜனாதிபதியை இன்று சந்தித்து, தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் எம்பிக்கள் முறையிடுகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 9ம் தேதி உரையாற்றும்போது, தமிழ்நாடு என்று சொல்லாமல், தமிழகம் என்று குறிப்பிட்டார். அதோடு தமிழ்நாட்டுக்காகவும், அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரையும் சொல்லாமல், தன்னிச்சையாக சில பகுதிகளை சேர்த்து உரை நிகழ்த்தினார்.
அப்போது சட்டப்பேரவையில் ஆளுநர் இருக்கும்போதே, இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, அரசு தயாரித்த அறிக்கை மட்டுமே பேரவையில் இடம்பெறும் என்று தீர்மானம் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னரே வெளிநடப்பு செய்தார். தமிழ்நாட்டுக்கு தமிழகம் என பெயர் மாற்றம் தேவை. தமிழ்நாடு சட்டசபையில் தன்னிச்சையாக உரை வாசித்தது உள்ளிட்டவைகளால் தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டங்களில் மாணவ அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் மூன்றாவது நாளாவதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி விவகாரம் தொடர்பாக திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்பிக்கள் ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கொண்ட குழு இன்று காலை சுமார் 11.45மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை, சட்டப்பேரவை தீர்மானங்களை நிலுவையில் வைத்துள்ளது, தமிழ்நாடு என்பதற்கு எதிராக கருத்து தெரிவித்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து அதுசார்ந்த கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.