ஆங்கிலேயர்களுக்கு எதிரானப் போராட்டத்தில், திருப்பூரில் தேசியக் கொடியை ஏந்தியபடி ரயில் நிலையம் நோக்கிச் சென்ற திருப்பூர் குமரனை காவல்துறையினர் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். உயிருக்குப் போராடிய நிலையிலும், தேசியக் கொடியை கீழேவிடாமல் கையில் பிடித்தபடி இருந்ததால், அவர் `கொடிகாத்த குமரன்’ என்று அழைக்கப்பட்டார். அவரின் 91-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கட்டப்பட்டிருக்கும் அவரது நினைவகத்திலுள்ள சிலைக்கும், அவர் தாக்கப்பட்ட இடத்தில் உள்ள நினைவுத் தூணுக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
“தமிழகத்திலுள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், எங்களின் நீண்டநாள் கோரிக்கையான சுதந்திரத்துக்காக தன்னுயிரை நீத்த கொடிகாத்த குமரன் பெயரை திருப்பூர் ரயில் நிலையத்துக்கு சூட்ட மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்து சலித்துவிட்டோம்” என்கின்றனர் திருப்பூர் மக்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன், “கொடிகாத்த குமரனின் நினைவாக அவர் தாக்கப்பட்ட இடத்தில் சாலையோரத்தில் சிறிய அளவிலான தூண் மட்டுமே இருக்கிறது. அதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
அவர் தாக்கப்பட்ட இடமான வடக்கு காவல் நிலையம் எதிரே சாலையில் நினைவு வளைவு அமைப்பது மற்றும் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு குமரனின் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது திருப்பூர் மக்களின் 30 ஆண்டுக்கால கோரிக்கை. இது தொடர்பாக பிரதமர்கள் முதல் முதல்வர்கள் வரை மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை.
75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் ரயில் நிலையத்துக்கு ஒரு வாரம் மட்டும், `தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயரே நீடிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஒரு வாரம் கழித்து அதை எடுத்துவிட்டனர். சுதந்திரப் போராட்டத்தின் அருமையை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ள திருப்பூர் ரயில் நிலையத்துக்கு கொடிகாத்த குமரனின் பெயரை சூட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.