தஞ்சாவூர்: திருவையாறில் தியாகராஜர் சுவாமியின் 176வது ஆராதனை விழாவில், ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமியின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார். முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை நேற்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை தியாகராஜர் சுவாமி வாழ்ந்த இடத்திலிருந்து உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டது. மேளதாளங்கள் முழங்க தியாகராஜரின் சிலை ஊர்வலமாக வந்து சன்னதியை சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி, தியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன், செயலாளர் தவில் வித்வான் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலு, தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வரம் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. பிரபல இசைக்கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள், ஆர்வலர்கள் ஒருமித்த குரலில் பாடியும், இசைக்கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். இரவு 10.20 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடந்தது.
* ‘தமிழ்நாடு’ வார்த்தை தவிர்த்து பாரதம் பற்றி பேசிய ஆளுநர்
விழாவில் ஆளுநர் என்.ஆர்.ரவி பேசுகையில், ‘இந்திய அடையாளம் ஸ்ரீராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களை ஸ்ரீராமர் ஆன்மிகத்தில் இணைத்துள்ளார். சனாதனம் இந்த பாரதத்தை உருவாக்கியது. நாடு முழுவதும் ராமரை விரும்புகின்றனர். இந்தியாவை உலக நாடுகள் வியந்து பார்க்கிறது. பாரதம் உலகத்தின் தலைமையாக இருக்கிறது. இங்கு அறிவியல், ஆன்மிகம் அனைத்தும் சிறந்து விளங்குகிறது. இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் நாடாகவும், உலகின் தலைமையகமாகவும் விளங்கும். உலகில் தீவிரவாதம் உள்ளிட்டவை அதிகம் இருக்கும் நிலையில், அவற்றிலிருந்து மக்களை காக்க உலகத்துக்கு பாரதம் ஒளியாக இருக்கிறது. நாம் பொருளாதாரம், ராணுவம், ஆன்மிகம் ஆகியவற்றில் வலிமையாக இருக்கிறோம் என்றார். அவர் பேச்சில் தமிழ்நாடு என்று கூறுவதை தவிர்த்தார்.