திருவையாறு: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா நிறைவு நாளான நேற்று, பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி இருக்கிறது.
ஆண்டுதோறும் இவ்விடத்தில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த வருடம் இரண்டு நாட்கள் மட்டும் ஆராதனை விழா நடந்தது. இந்த ஆண்டு ஆறு நாட்கள் விழாவாக தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா இன்று நடைபெற்றது.
இந்தாண்டு விழாவை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 6ம் தேதி மாலை தொடங்கி வைத்தார். இதையடுத்து தினமும் காலை முதல் இரவு வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் வாய்ப்பாட்டு மற்றும் இசைக்கருவிகளை இசைத்து சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
நிறைவு நாளான இன்று அதிகாலையிலேயே தியாகராஜர் சுவாமி வாழ்ந்த இடத்திலிருந்து, உஞ்ச விருத்தி பஜனை புறப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாக சந்நிதியை சென்றடைந்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தியாகராஜ ஸ்வாமி சன்னதியில் வழிபாடு நடத்தினார். விழாவிற்கு தியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி. கே. வாசன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், காலை நாதஸ்வரம் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து காலை 9 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக…’ என்ற பாடல் பாடல்கள் பாடி அஞ்சலி செலுத்தினர்.
இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.