நள்ளிரவு 11.30 மணிக்கு கோவை கார் வெடிப்பில் பலியானவர் வீட்டில் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை உக்கடம் கோட்டை மேடு பகுதியில், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாத நோக்குடன் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட இந்த தாக்குதலில் ஜமிஷா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
image
வழக்கில் தொடர்புடையவர்கள் எனக்கூறி முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தௌபிக், சனாபர் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து சென்னையில் வைத்து தொடர்ந்து விசாரித்து வந்தனர் தேசிய புலனாய்வு அதிகாரிகள். இந்நிலையில் நேற்று காலை இந்த  6 பேரையும் கோவை அழைத்து சென்று காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இவர்களில் சனாபர் அலி, முகமது ரியாஸ், நவாஸ், தௌபிக் ஆகிய 4 பேரை மட்டும் நள்ளிரவு 11.30 மணி அளவில் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபின் இல்லத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையில் நான்கு பேரிடமும் விசாரணையானது நடத்தப்பட்டது.
image
மேலும் ஜமீஷா முபீனின் வீட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்தும் 4 பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து 4 பேரையும், உக்கடம் பகுதியில் உள்ள சனாபர் அலியின் வீடு மற்றும் ஜி.எம் பேக்கரி உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதுடன் அதை வீடியோ பதிவாகவும் பதிவு செய்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.