கலிபோர்னியா: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலர் (ரூ.15 லட்சம் கோடி) சரிந்துள்ளது. 2021 நவம்பரில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக (ரூ.26 லட்சம் கோடி) இருந்தது. இது இம்மாதத்தில் 137 பில்லியன் டாலராக (ரூ.11 லட்சம் கோடி) சரிந்துள்ளது. உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை. பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என்ற வகையில் எலான் மஸ்க் கின்னஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்து தொழில திபர் மசயோஷி சன் கடந்த 2000-ம்ஆண்டு 58.6 பில்லியன் டாலர் (ரூ.5 லட்சம் கோடி) இழப்பைச் சந்தித்து, கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றார். 2000 பிப்ரவரி மாதம் அவரது சொத்து மதிப்பு 78 பில்லியன் டாலராக (ரூ.6.4 லட்சம் கோடி) இருந்தது. ஜூலையில் அது 19.4 பில்லியன் டாலராக (ரூ.1.6 லட்சம் கோடி) சரிந்தது. இந்நிலையில் தற்போது அவரை எலான் மஸ்க் முந்தியுள்ளார்.
எலான் மஸ்க் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.6 லட்சம் கோடி) வாங்குவதாக அறிவித்தார். அதற்கான நடைமுறைகள் கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்து ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமானது. ட்விட்டருக்கான தொகையை செலுத்த டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்றுவருகிறார்.
ட்விட்டருக்கு சிஇஓ-வாக பொறுப்பேற்ற எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளத் தொடங்கினார். 50 சதவீத ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார்.
இதனால், சர்வதேச அளவில் எலான் மஸ்க் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர்.
இதன் காரணமாக எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.