பெங்களூருவில் மெட்ரோ பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இரும்பு தூண் சாலையில் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு நாகவாரா பகுதியில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஹெண்ணூர் அருகே மெட்ரோ வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்ட இரும்பு தூண் ஒன்று சாய்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் சென்ற தாய் தேஜஸ்வினி மற்றும் 2 வயது குழந்தை விஹான் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த குழந்தையின் தந்தை லோஹித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்த மெட்ரோ பில்லரானது இரும்பு கம்பிகளாலான 40 அடி உயரமுள்ளது. இதுகுறித்து பெங்களூரு துணை கமிஷ்னர் டாக்டர் பீமாஷங்கர் குலேத் கூறுகையில், “4 பேர் பயணித்த பைக்கின்மீது மெட்ரோ பில்லரானது நொறுங்கி விழுந்தது. இதில் படுகாயமடைந்த தேஜஸ்வினி மற்றும் மகன் விஹான் இருவரையும் அல்தியூஸ் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்செல்லப்பட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவரும் உயிரிழந்தனர்” என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பகுதியில் இரண்டு நாட்களுக்கு மெட்ரோ பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பில்லர் சாய்ந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார். பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ”நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காதவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” என லோஹித் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM