பெங்களூரு:
காலத்தை தள்ளுங்கள்
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று கலபுரகியில் பஞ்சரத்னா யாத்திரை நடத்தினார். அப்போது அங்கு நடைபெற்ற ஜனதா தளம் (எஸ்) கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் இந்த அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. விவசாயிகள் இன்னும் 4 மாதங்கள் தைரியமாக காலத்தை தள்ளுங்கள். அதன் பிறகு மாநிலத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆட்சி அமைய உள்ளது. அதன் பிறகு உங்களின் கஷ்டத்தை நான் தீர்க்கிறேன்.
மின்சாரம் வழங்குவேன்
விவசாயிகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறேன். சுகாதாரம், கல்வி, விவசாயத்திற்காக யாரும் கடனில் சிக்கி கொள்ள வேண்டாம். உங்களின் வாழ்க்கை தரத்தை நான் உயர்த்துகிறேன். நான் முதல்-மந்திரி ஆனால் விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வினியோகம் செய்வேன். விவாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்குவேன்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகையை பருவமழை தொடங்குவதற்கு முன்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். விவசாயிகள் கடந்த 2022-ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு கட்டணமாக ரூ.193 கோடி வழங்கினர். ஆனால் உங்களுக்கு வெறும் ரூ.28 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. பசல் பீமா பயிர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது. உங்களின் கஷ்டங்களை தீர்க்க நான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.