நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகிலிருக்கும் தன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்-ஜெயஸ்ரீ தம்பதிக்கு, ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு சிறு குழந்தைகள் இருக்கின்றனர். இதில், தம்பதியின் மூன்றரை வயது பெண் குழந்தையான சிவதர்ஷினி கடந்த சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டு, அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால், அந்தக் குழந்தையை அவரின் பெற்றோர், பரமத்தி வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். ஆனால், அந்தக் குழந்தையின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததால், கரூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர் பெற்றோர்.
இந்த நிலையில், சிகிச்சையிலிருந்த அந்தச் சிறுமி, திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காய்ச்சலால் குழந்தை பலியான சம்பவம் அந்தப் பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதனால், “காய்ச்சல் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, அந்தப் பகுதியில் நாமக்கல் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் குழந்தை இறந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவக் குழுவிடம் விவரம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், “நோய் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் பங்கு முக்கியமானது. தேங்காய் சிரட்டைகளை அதிக அளவில் சேகரித்து வைத்திருப்பதால் அதில் மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தி ஏற்படும். மேலும், குப்பைகளை தரம் பிரித்தும், குப்பைகள் சேர விடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, 15 வட்டாரங்களிலும் 318 கொசு ஒழிப்பு பணியாளர்களும், பேரூராட்சி பகுதிகளில் 190 கொசு ஒழிப்பு பணியாளர்களும், நகராட்சியில் 295 கொசு ஒழிப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை, மருந்து தெளிக்கப்பட்டு, புகை மருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.