லுாட்ஜெரட் : ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் மின் உற்பத்தி தேவைக்காக நிலக்கரி தோண்டும் பணியை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, சுரங்கத்தை முற்றுகையிட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மனியின் எரிசக்தி உள்ளிட்ட ஆற்றல் தேவையை பெருமளவு ரஷ்யாவே பூர்த்தி செய்து வந்தது.இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஈடுபட்டு வருவதால், பெரும்பாலான உலக நாடுகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் சார்பில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது.இதன் காரணமாக ஜெர்மனிக்கு வழங்கி வந்த எரிவாயுவை, ரஷ்ய அரசு திடீரென நிறுத்தியது. இதனால் மாற்று வழிமுறைகளை கண்டறிய ஜெர்மனி அரசு முடிவு செய்தது.
ஜெர்மனியின் லுாட்ஜெரட் நகரில் நிலக்கரி பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு சுரங்கம் தோண்டி, நிலக்கரி எடுக்கும் பணி துவங்கியது.
நிலக்கரி தோண்டி எடுப்பதால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து நீதிமன்றத்திலும் சுரங்கம் தோண்டும் பணிக்கு தடைவிதிக்கக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலக்கரி சுரங்கத்தால் இயற்கைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து நிலக்கரி சுரங்கத்தில் தோண்டும் பணியை மீண்டும் மேற்கொள்ள முயற்சித்தபோது, 100க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுரங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர், சுரங்கத்திலும் இறங்கி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், மிளகு ‘ஸ்ப்ரே’ அடித்து போராட்டக்காரர்களை விரட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement