புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல அமைச்சர்கள் பதவி பறிக்கப்படுவதாகவும், முக்கிய இலாகாக்கள் மாற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி தனது 2வது பதவிக்காலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒருமுறை மட்டுமே அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். அதற்கு முந்தைய 5 ஆண்டு ஆட்சியில் அவர் 3 முறை அமைச்சரவையை மாற்றினார்.
இந்நிலையில், தற்போது அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்ய பாஜ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜவின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும், வரும் 31ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் முன்பாக அமைச்சரவையை மாற்றி அமைப்பதில் பாஜ உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த ஆண்டு கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் என 9 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்க உள்ளன. அதுதவிர அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலும் நடக்க உள்ளது. எனவே மக்களவை தேர்தலுக்கு 15 மாதங்களே எஞ்சியிருப்பதால், பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் போன்ற மூத்த தலைவர்கள் அமைச்சரவையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதுபோல இம்முறையும் முக்கிய அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், முக்கிய இலாக்காக்களிலும் அமைச்சர்களை மாற்ற பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதே போல், கட்சியிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.