கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆரம்ப பள்ளியில் பாம்பு இறந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட 30 மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்கத்தின் பிர்பும் மாவட்டத்தல் மயூரேஷ்வர் பிரிவில் அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே மதிய உணவுக்காக பருப்பு வைக்கப்பட்டு இருந்த டப்பாவில் பாம்பு இருந்ததாக சத்துணவு ஊழியர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரது இருசக்கர வாகனத்துக்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.