புதுடெல்லி: பிரதமராக பதவியேற்றது முதல் இன்று வரை மோடி தனது மருத்துவ செலவுக்காக அரசின் நிதியை பயன்படுத்தவில்லை என்று தகவல் ஆர்வலருக்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் பிரஃபுல் சர்தா என்பவர், பிரதமர் மோடி தொடர்பான சில தகவல்களை கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார்.
அதற்கு பிரதமர் அலுவலகம் அனுப்பிய பதிலில், ‘பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றது முதல் இன்று வரை அவருக்கு என்று தனியாக அரசின் செலவில் மருத்துவச் செலவுகள் எதுவும் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா கூறுகையில், ‘உடல் ஆரோக்கியம் பேணுதல் தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி விழிப்புணர்வு கருத்துகளை கூறிவருவார்.
அவர் தனது வாழ்க்கையிலும் பின்பற்றி வருகிறார். மக்கள் செலுத்தும் வரிப்பணம் பிரதமர் மோடியின் உடல்நலன் சார்ந்த விசயங்களுக்காக அரசின் பணத்தை பயன்படுத்தவில்லை என்பதை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. அவரது பழக்கத்தை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களது தனிப்பட்ட மருத்துவச் செலவுகளை சொந்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.