பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரை தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இருந்து மட்டும் 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் பொங்கல் முடிந்து திரும்புவதற்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையங்களுக்கு 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
எந்தெந்த ஊர்களுக்கு செல்ல.? எந்தெந்த பேருந்து நிலையம்.?
தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம்;
தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள். மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
பூந்தமல்லி பேருந்து நிலையம்;
பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம், செய்யாறு, திருப்பத்தூர், ஓசூர், திருத்தணி, திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்குறிப்பிட்ட ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.(புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR) சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தென்காசி, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 044 24749002 மற்றும் 044 26280445 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.