திருக்கோவிலூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருக்கோவிலூரில் நடந்த மாட்டுச்சந்தையில் நேற்று ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டித்தாங்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகள் மற்றும் வண்டி மாடுகள், ஆடு ஆகிய கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற இந்த மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு தீட்டப்படும் வர்ணம், விதவிதமான கயிறு வகைகள், சலங்கைகளும் அதிகளவில் விற்பனையானது. இந்த மாட்டுச்சந்தையில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடியதாலும், மாடுகளை எடுத்து செல்ல மினி டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் குவிந்ததால் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.