புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் தீவிரவாதத்தால் உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை 1.35 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், தீவிரவாதத்துக்கு பாதுகாப்பு படையினர் தரும் பதிலடி நடவடிக்கைகளும் ஒப்பீட்டளவில் உயர்ந்துள்ளன. இருந்தபோதிலும், பாகிஸ்தான் மற்றும்வங்கதேசத்தில் உள்ள தடைசெய்யப்பட்ட குழுக்களால் இந்தியாவில் தீவிரவாதம் தூண்டப்பட்டு வருவது தரவுகளின் பகுப்பாய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதனை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோடிட்டு காட்டி பேசியுள்ளார்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் மிக பலவீனமான நிலைக்கு சென்றுள்ளது. அதனிடம் அந்நியச் செலாவணி 4.5 பில்லியன் டாலர் மட்டுமே தற்போது கையிருப்பாக உள்ளது. பாகிஸ்தான் பொருளாதாரம் படுமோசமான நிலையில் இருந்தாலும், அப்பிரச்சினையிலிருந்து மீளநடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதையே முதன்மையான குறிக்கோளாக கொண்டு அந்த நாடு செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் தீவிரவாத குழுக்கள் இந்தியாவுக்குள் ட்ரோன்களை பறக்க விடுவதன் மூலம் ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளன.
அதேபோன்று, ஆப்கானிஸ்தானுக்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு நிதியளித்து வருகிறது. இவைதவிர, இந்திய-நேபாள எல்லையில் 5 கி.மீட்டருக்குள் மசூதிகள், மதரஸாக்களை அதிகளவில் கட்டுவதற்கு பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் பெருமளவில் நிதியுதவி வழங்கி வருவது தரவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.
லாகூர் தவிர, இங்கிலாந்து, கனடா மற்றும் ஜெர்மனியை தளமாகக் கொண்ட பிரிவினைவாதிகளுக்கு நிதியளிப்பதன் மூலம்சீக்கிய தீவிரவாதத்தை தூண்டுவதன் பின்னணியிலும் பாகிஸ்தான் ஆழமாக செயல்பட்டு வருகிறது.
இந்த மாதம் ஆஸ்திரியாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றியபோது இதுபோன்ற தரவுகளை சுட்டிக் காட்டியே சர்வதேச பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாக பேசினார்.