தஞ்சாவூர்: தஞ்சை ஸ்ரீதியாகராஜ கோயிலில் பஞ்சரத்ன கீர்த்தனை வைபவ விழாவை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா நிறைவு நாளான இன்று பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடந்தது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று சிறப்புரை ஆற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி; சனாதன தர்மம் என்பது தெற்கிலிருந்து தான் துவங்கியது. அதுவும் குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தான் துவங்கியது. உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம்.
சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது. அனைத்து மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியே நம் பாரதத்தின் வளர்ச்சி நம் நாட்டு கலாசாரத்தின் அடையாளமாக ஸ்ரீ ராமபிரான் திகழ்கிறார். நம்நாடு எந்தஒரு சர்வாதிகாரிகளாலும் உருவாக்கப்படவில்லை. ரிஷிகள், தியாகராஜ சுவாமிகள் போன்ற கவிகளாலும்தான் உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், ராணுவம், ஆன்மீகத்தில் இந்தியா வலிமையாக இருக்கிறது. பயங்கரவாதம் உள்ளிட்டவற்றில் இருந்து மக்களை காக்க உலகத்திற்கு இந்தியா ஒளியாக இருக்கிறது இவ்வாறு கூறினார்.