மதுரை: மதுரையில் கோயில் தரிசனத்துக்காக வந்த கர்நாடக பெண் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் அவமதிக்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் ராஜரத்தினம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கர்நாடக மாநிலம் சிமோகா பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஓம்சக்தி வழிபாட்டு குழு பெண்கள் சுமார் 6000 பேர், சிமோகா பாஜக எம்எல்ஏவும், முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா ஏற்பாட்டின் பேரில் தமிழக கோயில்களை தரிசிப்பதற்காக வந்தனர். அவர்கள் ஜன.7-ல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தனர். இந்த 6000 பெண் பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி ஈஸ்வரப்பா சார்பில் அதிகாரிகளுக்கு நான் முன்கூட்டியே கடிதம் அளித்தேன்.
மீனாட்சியம்மன் கோயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் பெண் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த தர கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் மீனாட்சியம்மன் கோயிலில் கர்நாடக பெண் பக்தர்களால் சரியாக தரிசனம் செய்ய முடியவில்லை. கட்டண தரிசனத்துக்கு தயாராக இருந்தும் ரசீது வழங்க ஆளில்லை. இதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினர்.
பெண் பக்தர்கள் வந்த வாகனங்கள் மதுரை கல்லூரியில் நிறுத்தப்பட்டது. அங்கு குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. மிகக்குறைந்த எண்ணிக்கையில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தண்ணீர் நிரப்பவில்லை. இதனால் பெண்கள் வேதனையடைந்தனர்.
மதுரை கல்லூரி மைதானத்தில் இருந்து மீனாட்சியம்மன் கோயில் செல்ல வாகன வசதி செய்ய அரசு போக்குவரத்து கழக பொது மேலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. அதற்கான கட்டணத்தை செலுத்த தயாராக இருந்தோம். ஆனால் கடைசி நேரத்தில் தனி பேருந்து வசதிக்கு மறுத்துவிட்டனர்.
மதுரைக்கு கோயில் தரிசனத்துக்காக கர்நாடகாவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டரில் இருந்து வந்த கர்நாடக தமிழ் பெண் பக்தர்களை போதுமான அடிப்படை வசதி செய்து கொடுக்காமல் அலைக்கழித்தது மனித உரிமை மீறலாகும். இதனால் மதுரை ஆட்சியர், மீனாட்சியம்மன் கோயில் செயல் அலுவலர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம்” என்று அவர் கூறினார்.