மதுரை: மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகளை கலெக்டர் அனீஷ் சேகர் ஆய்வு செய்து கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கலெக்டர் அனீஷ் சேகர் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்க முடியும். ஆன்லைனில் பதிவேற்றம் செய்த காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் தகுதியின் அடிப்படையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே கலந்துகொள்வர். பார்வையாளர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பிரத்தியேக ஏற்பாடுகள் செய்து தரப்படும்’’ என்றார்.