பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு 13-வது தவணைத் தொகை விடுவிப்புக்கு வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் என தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை கூறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை, 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு 13வது தவணை தொகை விடுவிக்க ஆதார் எண் அவசியம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் மட்டுமே 2000 ரூபாய் வழங்கப்படும்.
எனவே, பொது சேவை மையம் அல்லது பிஎம் கிசான் வலைதளத்திற்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை விவசாயிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.