போபால்: மத்திய பிரதேசத்தில், ஸ்ெபஷல் கிளாஸ் நடத்துவதாக கூறி 7 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பள்ளி ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷபீர் கான், 10ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகள் 7 பேர் தங்களது பெற்றோருடன் சென்று சிபாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் ஒரு மாணவி, ‘கடந்த டிசம்பர் 31ம் தேதி பள்ளியில் வகுப்பு தேர்வு தொடங்குவதற்கு முன்பு, கணிதம் கற்பிக்கும் ஆசிரியரான ஷபீர் கான் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தார். இதுதொடர்பாக எனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சக மாணவிகளிடம் தெரிவித்தேன்.
அவர்களும் தாங்களும் ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் பாலியல் தொந்தரவுகளை கொடுத்ததாகவும் கூறினர். அதையடுத்து பெற்றோர்களிடம் தெரிவித்தோம்’ என்று கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிபாபாத் இன்ஸ்பெக்டர் சுனில் யாதவ் கூறுகையில், ‘மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஷபீர் கான் மீது பிரிவு 354 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பள்ளியில் இருந்து மாவட்ட கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது’ என்றார்.