ராஜமௌலி இயக்கிய ‘RRR’ திரைப்படம் சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராமராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இக்கதாபாத்திரங்களில் பிரபல தெலுங்கு நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபீஸிலும் சாதனை படைத்தது.
சமீபத்தில் கோல்டன் குளோப் 2023 விருதுக்காக இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது இந்தப் படம். இந்நிலையில் கோல்டன் குளோப் விருது விழாவில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் (Best Original Song) பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. பலரும் படக்குழுவினரைப் பாராட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ‘RRR’ படம் தொடர்பான நிகழ்ச்சியில் ஒன்றில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பங்கேற்றனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் ஜூனியர் என்.டி.ஆர் மார்வெல் திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “நான் மார்வெல் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். மார்வெல் கதாபாத்திரங்களில் எனக்குப் பிடித்தது ‘அயர்ன்மேன்’தான். அவர் நம்மைப் போன்ற சாதாரணமான ஒருவர். அவருக்கு சூப்பர் பவர் இல்லை. அவர் வேறு கிரகத்திலிருந்தும் வரவில்லை. அவர் ஹல்க் போன்று அறிவியல் பரிசோதனையில் ஈடுபட்டு பவர் கிடைத்தவரும் அல்ல. அதனால் அவரோடு நம்மைச் சுலபமாகத் தொடர்புப்படுத்திக்கொள்ள முடிகிறது” என்று என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் சூப்பர்ஹீரோ படங்களால் புகழ்பெற்றுள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். மார்வெல்லின் ஸ்பைடர்மேன், தோர், ஹல்க் எனப் பல சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ‘அயர்ன்மேன்’ என்பது குறிப்பிடத்தக்கது.