மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரலாம் என்ற தகவல் திடீரென வெளியாகிய நிலையில், விழா ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டியையொட்டி பாரம்பரியமாக நடக்கும் ஜல்லிக்கட்டு திருவிழாக்கள் களைகட்டுவது வழக்கம். இதன்படி, இவ்வாண்டும் ஜல்லிக்கட்டுக்கு காளைகளும், மாடுபிடி வீரர்களும் மற்றும் பார்வையாளர்களும் தயாராகிவிட்டனர். ஜன.15-ல் அவனியாபுரத்திலும், ஜன.16-ல் பால மேட்டிலும், ஜன.17-ல் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடக்கிறது.
இம்மாவட்டத்தில் தைப்பொங்கல் தினத்தில் முதலில் தொடங்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாடிவாசல், காளைகள், பார்வையாளர்கள் கேலரிகள், விழா மேடை அமைத்தல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இவற்றை ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மேயர் இந்திராணி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், நேற்று பொறுப்பேற்ற மாநகர காவல் ஆணையர் கேஎஸ். நரேந்திரன் நாயர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திடலுக்கு இன்று சென்றார். அவர் விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டும், விழா நடக்கும் பகுதியை சுற்றிலும் ஆய்வு செய்தார். போலீஸ் பாதுகாப்பு அளிப்பது குறித்தும், விழா பற்றியும் பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். பின்னர், அவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் வைத்து, துணை ஆணையர் ஆறுமுகசாமி, சாய் பிரணீத், உதவி ஆணையர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
இதற்கிடையே, ஒவ்வொரு முறையும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு விஐபிக்கள் வருகை புரிவது வழக்கமாக உள்ளது. கடந்த முறை தற்போதைய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி வந்தார். இந்த முறையும் முக்கிய நபர்கள் வரலாம் என, எதிர்பார்க்கும் சூழலில், தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி இந்த ஜல்லிக்கட்டு விழாவை காண வரலாம் என்ற தகவல் கசிந்துள்ளது. ஒருவேளை அவர் வந்தால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இது பற்றி காவல்துறையினரிடம் கேட்டபோது, ‘மாநகர காவல் எல்லைக்குள் அவனியாபுரம் வருவதால் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஆய்வு செய்தார். ஆளுநர் வருகை பற்றி எவ்வித தகவலும் இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும், அவர் வருகை குறித்த தகவல் கிடைக்கும் பட்சத்தில் தகுந்த பாதுப்பு அளிக்க தயாராக உள்ளோம்’’ என்றனர்.