ஆங்கிலேயர்கள் சென்றுவிட்டனர்; இது வரலாற்றை இந்தியப் பார்வையில் எழுத வேண்டிய நேரம் – அமித் ஷா

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டனர். அதனால் இது வரலாற்றை இந்தியப் பார்வையில் எழுத வேண்டிய தருணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த சஞ்சீவ் சன்யாலின் “Revolutionaries, The other story of how India won its freedom” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி நாம் காலனி ஆதிக்கத்தின் எச்ச சொச்சங்களில் இருந்தும் கூட முழுமையாக விடுபட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் நாம் முதலில் நமது வரலாற்றை அந்த ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். வீர் சாவர்க்கர் அந்த வேலையை முதலில் செய்தார். அவர் 1857ல் நடந்த சிப்பாய் கலகம் தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று கூறியிருந்தார். இந்திய சுதந்திர வரலாற்றில் அஹிம்சைப் போராட்டங்களுக்கு நிறையவே பங்கு இருக்கிறது. ஆனால் இப்போதுள்ள வரலாற்று நூல்களில் மற்ற முறையிலான சுதந்திர போராட்டங்களுக்கு எவ்வித பங்களிப்பும் இல்லை என்று கூறப்படுவது உண்மையல்ல. அஹிம்சைப் போராட்டங்களுடனேயே பக்கவாட்டில் ஆயுதப் போராட்டங்களும் நடைபெறாவிட்டால் இந்தியாவிற்க சுதந்திரம் கிடைத்திருக்க இன்னும் பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்.

நமக்கு கிடைத்த சுதந்திரம் ஒன்றும் சகாயமாக, தானமாக வழங்கப்பட்டது அல்ல. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு சுதந்திரம் கிடைக்கக் காரணம் தியாகம். லட்சக்கணக்கான மக்கள் சிந்திய ரத்ததாலேயே சுதந்திரம் கிடைத்தது. இன்று டெல்லி கர்தவ்யபாதையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையைப் பார்க்கும்போது எனக்கு நிறைய நம்பிக்கை பிறக்கிறது.

இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘other story’ என்ற வார்த்தைதான் இதன் உள்ளடக்கத்தின் சுருக்கம். ஏனெனில் ஏற்கெனவே வரலாறு என்ற பெயரில் ஒரு கதை இங்கே நிறுவப்பட்டுள்ளது. அது மக்களிடம் நம்பும்படி சொல்லப்பட்டுள்ளது. வரலாறு, கல்வி என்ற பெயர்களில் ஒரு பார்வையை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் அஹிம்சைப் போராட்டங்களுக்கு பங்கில்லை என்று நான் சொல்லமாட்டேன். அது வரலாற்றின் ஒரு பகுதி தான். அது சுதந்திரத்திற்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளது. ஆனால் ஆயுதப் போராட்டங்களுக்கும் பங்கிருக்கிறது. 1857 புரட்சி அதற்கு வித்திட்டது. அரசாங்கத்திற்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்த உண்மையை புதிய தலைமுறை முன் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது.

வரலாறு வெறும் மிதவாதிகள், போராளிகள் வேறுபாடுகளை விவரிப்பதாக இல்லாமல் உண்மையைச் சொல்வதாக இருக்க வேண்டும். இந்தியாவை முதன்முதலில் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது முகலாயர்கள் பேரரசு என்பது ஏற்பதற்கல்ல. அதற்கு முன்னதாகவே 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்த பேரரசுகள் இருந்துள்ளன. இவ்வாறு அமித் ஷா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.