புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த 2-ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான வரைவு மசோதாவை வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த சுய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்மொழியப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்படும் இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.
மேலும், விளையாட்டுகளின் உள்ளடக்கத்தைக் கண்காணிக்கும். இந்த ஆணையத்தில், ஆன்லைன் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படாது. அனைவரது நலன்களை மையப்படுத்தி ஆணையம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சட்டம் பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது வரைவு மசோதா தொடர்பாக பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், துறைசார் நிபுணர்கள், முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.