ஆளுநர் ரவியின் செயல்பாடு சிறப்பு… டாக்டர் சர்டிஃபிகேட் !

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், “தமிழகத்தின் ஆளுநர் ரவி சிறப்பாக செயல்படுகிறார்; இந்தியராக செயல்படுகிறார். தமிழக மக்களின் வாழ்வாதாரம் நன்றாக இல்லை. தமிழகம் என்று சொன்னால் என்ன குற்றமாகி விடப் போகிறதா? தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநரை சபைக்கு அழைத்து அவமானப்படுத்துவது நியாயமா?

தமிழக அரசு குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக ஆட்சியின் மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், அவற்றை திசை திருப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது.

தமிழகத்தில் இளைஞர்கள் சினிமாவிற்காக நள்ளிரவில் சென்று உயிரை இழக்கிறார்கள். அவர்கள் அடித்துக் கொள்வதும் ஏன் என்று தெரியவில்லை. இளைஞர்கள் உள்ளிட்டோர் மது போதை மாத்திரை கஞ்சா ஆகியவற்றுக்கு அடிமையாகி வருகின்றன. தமிழகத்தில் கிராமங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் போதை மாத்திரைகள் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக செய்திகள் வருகின்றன. எனவே தமிழக அரசு முற்றிலுமாக மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதான் திராவிட மாடலா?: தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ” தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவது போல் செயல்படுகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதாக சொல்லும்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறுகிறார்.

ஈஷா மையத்தில் சுபஸ்ரீ உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். ஈசாவுக்கு என்று ஒரு சட்டம்; நமக்கு என்று ஒரு சட்டம் என எதுவும் கிடையாது. எனவே இதுகுறித்து முறையாக விசாரணை நடைபெற வேண்டும்.

சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி, ‘போயா’ என்று இழிவாக பேசி உள்ளார் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா, மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிடமாடலா?

நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது குறித்து மத்திய அரசு மட்டுமல்ல; மாநில அரசு மட்டுமல்ல; அனைவரும் ஒன்றிணைந்து தான் இதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குஷ்பூ கூறினார்.

2023 புத்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் உரையுடன் கடந்த ஜனவரி 9 இல் துவங்கியது. ஆரம்பே அமர்க்களம் என்பதே ஆளுநர் உரையை மையமாக கொண்டு, ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.