புதுடில்லி:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த நிதியாண்டில் குறையும் என தெரிவித்துள்ளது, உலக வங்கி.இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6.6 சதவீதமாக வேகம் குறையும்.
இருப்பினும், உலகளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட ஏழு வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டில், இந்தியா 6.9 சதவீத வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டில் வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. 2024 – 25 நிதியாண்டில் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
பாதிப்பு
உலக பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை, மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவை, இந்தியாவின் ஏற்றுமதியிலும், முதலீட்டு வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.அரசாங்கம் உள்கட்டமைப்பு செலவினங்களையும், பல்வேறு வணிக வசதிகளையும் அதிகரித்துள்ளது. இது தனியார் முதலீட்டை உயர்த்தி, உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்யும். கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில், பொருளாதார வளர்ச்சி 9.7 சதவீதமாக இருந்தது. இது வலுவான தனியார் நுகர்வு மற்றும் நிலையான முதலீட்டு வளர்ச்சி ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.
பணவீக்கம்
பணவீக்கத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில், பெரும்பாலும் ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கான 6 சதவீதத்தை விட அதிகரித்தே இருந்தது. இதனால், மே முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், வட்டி விகிதம் 2.5 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. நாட்டின் பொருட்கள் வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
இந்தியா, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகம் சரியாமல் இருக்க, அதன் அன்னிய செலாவணி இருப்பை அதிகம் விற்பனை செய்தது.
வட்டி விகிதம்
இந்தியாவைப் பொறுத்தவரை, அதன் பிராந்தியத்தை சேர்ந்த மற்ற பெரும்பாலான நாடுகளை விட, வட்டி விகித உயர்வு மற்றும் நிதி இறுக்கம் ஆகியவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசாங்கத்தின் போதுமான கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகள், தற்போதைய பொருளாதார மீட்சியை இழக்காமல் காக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement