பெங்களூரு:
பிரதமர் மோடிக்கு வரவேற்பு
கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் தேசிய இளைஞர் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில், பங்கேற்க டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி உப்பள்ளி வருகை தந்தார். அங்கிருந்து காரில் அவர் தேசிய இளைஞர் திருவிழா நடைபெற்ற பகுதிக்கு புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் பகுதி வரையிலான 6 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த மக்களை காரில் நின்றுகொண்டு பிரதமர் மோடி கையசைத்தபடி சென்றார். உப்பள்ளியின் முக்கிய சாலைகள் வழியாக இந்த தெருமுனை பிரசாரம் (ரோடு ஷோ) நடைபெற்றது. பிரதமர் மோடி வரும் போது பூக்கள் தூவி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பூ மாலையுடன் வந்த சிறுவன்
இந்த நிலையில், காரில் நின்றபடி பிரதமர் மோடி வந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு சிறுவன், அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை தாண்டி காரின் முன்பாக வந்தான். பின்னர் தன்னிடம் இருந்த பூமாலையை பிரதமர் மோடியிடம் கொடுக்க முயன்றான். பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமர் மோடி சென்ற வழித்தடத்திற்குள் சிறுவன் வந்ததால் போலீசாரும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் (எஸ்.பி.ஜி.) அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் சிறுவனை பிடித்ததுடன், அவனது கையில் இருந்த பூ மாலையை வாங்கினார்கள். அதே நேரத்தில் சிறுவனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பிடித்து சென்றார்கள். எஸ்.பி.ஜி. படையினரிடம் இருந்து
சிறுவன் கொடுத்த பூ மாலையை வாங்கிய பிரதமர் மோடி, அதனை காரின் முன்பாக போட்டுக் கொண்டார்.
பாதுகாப்பு குறைபாடு
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வரவேற்பின் போது பூமாலையுடன் சிறுவன் புகுந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் வருகையையொட்டி சாலையின் இருபுறமும் இரும்பால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
அத்துடன் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் இரும்பால் ஆன தடுப்பு வழியாக புகுந்து சிறுவன், பிரதமர் மோடியின் அருகே பூ மாலையுடன் வந்ததால், பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீஸ் விசாரணை
இதையடுத்து, பூ மாலையுடன் வந்த சிறுவனை பிடித்து உப்பள்ளி போலீசார் விசாரித்தனர். அந்த சிறுவனுக்கு 11 வயது தான் ஆகிறது. அந்த சிறுவன் மற்றும் அவனது பெற்றோரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரதமர் பயணித்த பகுதியில் பூ மாலையுடன் சிறுவன் புகுந்த சம்பவம் பரபரப்பையும், பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.