புதுச்சேரி: தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா நடந்தது. முதல்வர் ரங்கசாமிக்காக இரண்டரை மணி நேரம் துணைநிலை ஆளுநர் தமிழிசை காத்திருந்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காலை 8 மணியளவில் ஆளுநர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார். தொடர்ந்து ஆளுநர் தமிழிசை உறியடித்தார். தமிழர் பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என பல்வேறு கலை நிகழ்வுகள் நடந்தது. மாட்டு வண்டி ஊர்வலத்தை ஆளுநர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பொங்கல் விநாயகருக்கு படைப்பதற்கு முதல்வர் ரங்கசாமி வருகைக்காக ஆளுநர் தமிழிசை காத்திருந்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்சரவணக்குமார், பேரவைத்தலைவர் செல்வம், எம்பி செல்வகணபதி மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் காத்திருந்தனர். முதல்வர் வர தாமதமானதால் தலைமைச்செயலர் ராஜீவ்வர்மா, டிஜிபி மனோஜ்குமார் லால், அரசு துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரை காலை உணவு சாப்பிடக் கூறினார்கள்.
அப்போது சிறுதானியத்தில் செய்த கம்பு லட்டு, ராகி சேமியா, சிறுதானிய இட்லி, வடை, சாமை பணியாரம், இனிப்பு பொங்கல், சிறுதானிய தோசை, குதிரைவாலி பொங்கல், சாம்பார், பலவகை சட்னிகள் வைக்கப்பட்டிருந்தது. பொங்கல் விழாவுக்கு வந்த தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலாளர்கள் உதயகுமார், அபிஜித்விஜய் சவூத்திரி, ஏடிஜிபி ஆனந்தமோகன், ஐஜி சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தனர்.
காலை 8 மணிக்கு விழா தொடங்கினாலும் முதல்வர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காலை 10.30 மணிக்கு வந்தனர். அதையடுத்து மந்திரங்கள் ஒதப்பட்டு விநாயகருக்கு பொங்கல் படையல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்துதான் ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் காலை உணவு சாப்பிட்டனர்.