இந்தியாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் என்ற மருந்து நிறுவனத்தின் AMBRONOL syrup and DOK-1 Max syrup ஆகிய இருமல் மருந்து தரமற்றவை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
கடந்த மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்நிறுவனத்தின் இருமல் மருந்தை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. உஸ்பெகிஸ்தானில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக 21 குழந்தைகள் டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தை அருந்தினர்.
அதில், சுவாசக் கோளாறு ஏற்பட்டு 18 குழந்தைகளும் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானில் மரியான் பயோடெக் நிறுவனத்தின், டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தில் எத்திலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் கலந்திருப்பதாகவும், இதுவும் குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புகாரைத் தொடர்ந்து மரியான் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்து உத்தரப் பிரதேச அரசின் மருந்தக ஆய்வாளர் உத்தரவிட்டார்.
இதற்கு முன்னதாக ஆப்ரிக்க நாடான காம்பியாவிலும் இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் பலர் உயிரிழந்ததாக சர்ச்சை வெடித்தது. தொடர் புகார்களை அடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய ஆய்வு நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், இரண்டு இருமல் மருந்துகளும் தரமற்றவை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதை பயன்படுத்துவது பாதுகாப்பு இல்லை என்றும், மருந்துகள் குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தி உயிரைக் கூட பறிக்கும் அபாயத்தை கொண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
newstm.in