நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் தொகையில் சுமார் 65 சதவீத மக்கள் கல்குளம், விளவங்கோடு ஆகிய தாலுகாக்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் ரயில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் ஆளூர், இரணியல் பள்ளியாடி, குழித்துறை, குழித்துறை மேற்கு ஆகிய ரயில் நிலையங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதி மக்கள் திருவனந்தபுரத்தில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவில் சந்திப்பு வந்துவிட்டு, அங்கிருந்து திருநெல்வேலி செல்ல அடுத்து ரயில் இணைப்பு வசதி இல்லை. ஆகவே நாகர்கோவில் பேருந்து நிலையத்துக்கு வந்து விடுகின்றனர். பின்னர் திருநெல்வேலி செல்லும் பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்யும் நிலை உள்ளது.
நாகர்கோவில் இருந்து திருநெல்வேலிக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் இயக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து எவ்வளவு பயணிகள் பயணிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே திருவனந்தபுரத்தில் இருந்து தற்போது காலை 6.50 மணிக்கு புறப்படும் 06433 ரயில் நாகர்கோவிலுக்கு 8.40 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து அலுவல் பணிகளுக்கு செல்ல வசதியாக காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி செல்லுமாறு கால அட்டவணை அமைத்து இயக்க வேண்டும்.
மறுமார்க்கமாக இந்த ரயில் தற்போது நாகர்கோவில் இருந்து ருந்து 18.35 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி புறப்படுகிறது. இந்த ரயிலை நீட்டிப்பு செய்யும் போது திருநெல்வேலியில் இருந்து மாலை 17.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு தற்போது செல்லும் நேரம் 20.25 மணிக்கு செல்லுமாறு இயக்க வேண்டும். திருநெல்வேலி மக்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக திருவனந்தபுரத்துக்கு பயணம் செய்கின்றனர். அவர்கள் நேரடியாக திருவனந்தபுரத்துக்கு செல்ல போதிய பயணிகள் ரயில்கள் இல்லை. ஆகவே திருநெல்வேலியில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு 8.10 மணிக்கு நாகர்கோவில் வரும் ரயிலை கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
அதேபோல் மறுமார்க்கமாக இந்த ரயில் தற்போது நாகர்கோவில் இருந்து மாலை 18.50 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலை கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து 17.00 மணிக்கு கொச்சுவேலி இருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது திருநெல்வேலி மாவட்ட மக்கள் கொச்சுவேலி இருந்து கொங்கள் வழித்தடம் வழியாக மும்பை செல்லும் பல்வேறு ரயில்களுக்கு இணைப்பு ரயில் சேவை கிடைக்கும்.
தற்போது காலையில் நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 4.30 மணிக்கு பிறகு 6.25 மணிக்கு தான் திருவனந்தபுரத்துக்கு ரயில் சேவை உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு வரை கன்னியாகுமரி – மும்பை ரயில் காலை 6.5 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு 7.55 மணிக்கு செல்லுமாறு இயக்கப்பட்டது. இந்த ரயில் கால அட்டவணை மாற்றப்பட்ட பிறகு தற்போது 2 மணி நேரத்துக்கு திருவனந்தபுரம் மார்க்கம் எந்த ஒரு ரயில் சேவையும் இல்லை.
ஆகவே இந்த ரயிலை கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் காலையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 3 பயணிகள் ரயில் சேவையும், மாலையில் இது போன்று 3 ரயில் சேவையும் கிடைக்கும். இது குமரி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் இயங்கும் ரயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்து காலை 6 மணிக்கு முதல் ரயிலும் 7 மணிக்கு 2வது ரயிலும் 8 மணிக்கு 3வது ரயிலும் புறப்படுமாறு இயக்கலாம்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் வீதம் கால அட்டவணை அமைத்து இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை ரயில்வே அதிகாரிகள் பரிசீலனை செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.