ஒற்றுமை யாத்திரை – 21 கட்சிகளுக்கு காங். அழைப்பு!..

காஷ்மீரில் 30-ந் தேதி நடக்கும்,ஒற்றுமை பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் நாடுதழுவிய பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக யாத்திரை பஞ்சாபை அடைந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 300 கி.மீ.க்கு மேல் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், இம்மாதம் 30-ந் தேதி யாத்திரை நிறைவடைகிறது. அதில், ராகுல்காந்தி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். இந்தநிலையில், பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ,பாதயாத்திரை தொடங்கியதில் இருந்தே ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராகுல்காந்தி அழைப்பின்பேரில், பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளது சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், அதேபோல், ஸ்ரீநகரில் 30-ந் தேதி நடக்கும் நிறைவு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.

வெறுப்பு, வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடி உயிர்நீத்த காந்தி நினைவு நாளில் நடக்கும் நிகழ்ச்சியை மகாத்மாவின் நினைவுகளுக்கு அர்ப்பணிப்பதாக கூறப்பட்டுள்ளது. சிக்கலான இந்த தருணத்தில் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனம் திசை திருப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பாதயாத்திரை வலிமையான குரலாக உருவெடுத்துள்ளது என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே, நீங்கள் பங்கேற்றால், யாத்திரையின் நோக்கத்ததுக்கு வலு சேர்ப்பதாக அமையும் என்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பங்கேற்பீர்கள் என்று நம்புவதாக குறிப்பிட்ட காங்கிரஸ்,பொருளாதார, சமூக, அரசியல் சிக்கலை நாடு சந்திக்கும்போது, எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படும் நிலையில், லட்சக்கணக்கானோரை யாத்திரை இணைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்றுள்ளதால், மக்களுடனான நேரடி உரையாடலே யாத்திரையின் மிகப்பெரிய சாதனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.