சேலம்: பொங்கல் பரிசு தொகுப்புக்கு, கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்க அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, அந்தந்த மாவட்ட கலெக்டர், கூட்டுறவு இணை பதிவாளர் மற்றும் வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து செங்கரும்பு கொள்முதல் பணியில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட ஏக்கர்களின் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கரூர், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு, வேளாண்மை அதிகாரிகள் இடைப்பாடி பகுதிக்கு வந்து விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்பை ஆய்வு செய்து மொத்தமாக கொள்முதல் செய்தனர். 8 மாவட்டங்களுக்கு கரும்பு கொள்முதல் செய்யப்பட்டதால், சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, சேலம் மாவட்டத்திற்கு 10.74 லட்சம் கரும்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன. இதையடுத்து கரும்புகொள்முதல் செய்த விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டன.