ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டுயானை ஒன்று பயணிகள் பேருந்தை வழிமறித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர், தாளவாடி,மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்ச்சாலைகளில் அவ்வப்பொழுது காட்டுயானைகள் வாகனங்களை வழிமறித்து தாக்குவதும் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துவதும் வழக்கம் ஆன ஒன்றாகவே மாறிவிட்டது. நேற்று மாலை கர்நாடக மாநிலம் கொள்ளேகலில் இருந்து ஆசனூர், சத்தியமங்கலம் வழியாக கோவை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது கெத்தேசால் வனசாலை அருகே பேருந்தை காட்டுயானை ஒன்று வழிமறித்தது. யானையை கண்ட ஓட்டுநர் பேருந்தை மெல்ல பின்னோக்கி நகர்த்தினார். அப்போது கோவமடைந்த காட்டுயானை பேருந்தை தாக்கியது. யானை ஆவேசமாக தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. யானையின் திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து பீதியில் அலறினர். சிறிது நேரம் அப்பகுதியை விட்டு அகலாத யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. இதனை அடுத்து சேதம் அடைந்த அரசு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.