சபரிமலை ஐயப்பனை அரசனாக்கி அழகுபார்க்கும் `திருவாபரண ஊர்வல’ புறப்பாட்டின் கண்கொள்ளா காட்சி!

மகர விளக்கு பூஜை நாளான ஜனவரி 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு சார்த்தி அலங்கரித்து அழகுபார்க்கும் பந்தள மகராஜா வழங்கிய தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கிய “திருவாபரண” ஊர்வலம் பந்தளத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
முன்னதாக அரண்மனையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட இவையாவும், பந்தளம் தர்மசாஸ்தா கோவிலில் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு, அங்கிருந்து மேல தாளங்களுடன் பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டுள்ளது.
image
பந்தள ராஜகுமாரனான ஐயப்பனை புலிப்பால் கேட்டு காட்டுக்குள் அனுப்பிய சூழ்ச்சிக்கு பிறகு, புலியோடு வந்து மகாராணிக்கு புலி பால் கொடுத்துவிட்டு, பின் கோபித்துக் கொண்டு அரண்மனையில் இருந்து வெளியேறி துறவறம் பூண்டு சபரிமலையில் பிரம்மச்சாரியாக வீற்றிருக்கிறார் ஐயப்பன்.
பின்னர் அரச குடும்ப வாழ்க்கையை உதறிவிட்டு துறவரம் பூண்ட பிரம்மச்சாரியான ஐயப்பனை, அரச கோலத்தில் பார்க்க விரும்பிய பந்தள மகாராஜா, அவருக்கு திருவாபரணங்கள் அனுப்பி பந்தள அரசனாக அழகு பார்த்தார் என்பது வரலாறு.
image
இந்நிலையில் பந்தளம் ஸ்ராம்பிகல் அரண்மனையில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்கள், குருசுவாமி குளத்தினால் கங்காதரன் பிள்ளை தலைமையிலான குழுவினரால் பெறப்பட்டு வலியகோயிகால் தர்மசாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டன. அங்கு பக்தர்கள் ஆபரணங்களை தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆபரணங்களுக்கு கோவிலில் சடங்குகள் நடத்தப்பட்டன.
image
அதனைத்தொடர்ந்து குளத்தினால் கங்காதரன் பிள்ளை தலைமையிலான குழுவினர் திருவாபரணங்கள் அடங்கிய மூன்று பெட்டிகளை தலையில் சுமந்து சபரிமலை நோக்கிச் புறப்பட்டுள்ளனர். பந்தளம் அரண்மனை ராணி 94 வயது நிரம்பிய அம்பா தம்புராட்டி (94) கடந்த டிசம்பர் 26ம் தேதி காலமானார். இதனால் திருவாபரண ஊர்வலத்தில் பந்தளம் அரண்மனை பிரதிநிதியான ராஜராஜ வர்மா ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை.
image
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கிய மூன்று பெட்டிகளும் பெருவழிப்பாதை வழியாக 80 கிலோ மீட்டர் கால்நடையாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஊர்வலம் பம்பையை நெருங்குவதை தொடர்ந்து, மகர விளக்கு பூஜை நாளான ஜனவரி 14ம் தேதி இரவு 08.45 மணிக்கு சபரிமலையில் “மகர சங்கிரம” பூஜை நடக்கவிருக்கிறது.
திருவாபரண ஊர்வலம் பம்பை, சரங்கொத்தி வழியாக ஜனவரி 14ம் தேதி சபரிமலை சன்னிதானம் வந்தடையும். பின் ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மாலை 06.00 மணியில இருந்து 06.30 மணிக்குள் மகா தீபாராதனை நடக்கும். பந்தள மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, அரசனாக, பந்தள ராஜகுமாரனாக ஜொலிக்கும் ஐயப்பனுக்கு, தீபாரதனை காட்டும் போது வானில் மகர நட்சத்திரம் தோன்றும். அதே நேரம், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். ஐயப்பன் ஜோதியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் என்பது ஐதீகமாக உள்ளது.
image
மகரஜோதி தரிசனம் நாளைக்கு பின் ஜனவரி 20ஆம் தேதி வரை ஐயப்பன் அரச கோலத்தில் காட்சி அளிப்பார். ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அரசு கோலத்தில் உள்ள ஐயப்பனை தரிசிக்க அனுமதி உண்டு. ஜனவரி 20ஆம் தேதி பந்தள அரச குடும்பத்தின் தரிசனத்தோடு சபரிமலை நடை அடைக்கப்பட்டு, சாவி அரசு குடும்ப பிரதிநிதி இடம் ஒப்படைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.