ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்நாடு என பயன்படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, விருந்து உபசாரத்தின் போது தனித்தனியே அமர்ந்திருந்த ஓபிஎஸ் இபிஎஸ்-ஐ அழைத்து ஒரே மேசையில் அமர வைத்தார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா, மிக பிரம்மாண்டமாக பாரம்பரிய நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு மரியாதை செய்தார்.
அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பொங்கல் பண்டிகை தமிழர்களின் பெருமையான பண்டிகை. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலாச்சாரத்தையும் நமது வீரத்தையும் ஜல்லிக்கட்டு மூலமாக பொங்கல் பண்டிகை வலியுறுத்துகிறது. இன்று பாரம்பரிய விழாக்கள் ஆளுநர் மாளிகை கொண்டாடப்பட்டதில், இந்த ஆளுநர் மாளிகையே ஒரு சிறிய *தமிழ்நாடு* போல இருந்தது” என்றார்.
ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு இலச்சினை தவிர்க்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விழா மேடையில் அமைக்கப்பட்டுள்ள பேனரில் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் இந்திய அரசின் இலச்சினையும், அதில் தமிழ்நாடு என்றும் இடம்பெற்றிருந்தது.
மேலும் பொங்கல் விழா முடிந்து விருந்து உபச்சார நிகழ்ச்சியில் கவர்னர் உடன் முக்கிய அழைப்பாளர்கள், நீதி அரசர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒரே மேஜையில் அமர வைத்து விருந்து உபச்சாரம் நடத்தினார் ஆளுநர். இது அவரது தொண்டர்கள் இடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM