சென்னை: “சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய கடல்வழி போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக, பாதுகாப்பானதாக அமையும். குறிப்பாக தென்தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக்க பயனுள்ள திட்டமாக அமையும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்பியுமான ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய கடல்வழி போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக, பாதுகாப்பானதாக அமையும்.குறிப்பாக தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக்க பயனுள்ள திட்டமாக அமையும். தற்போது இத்திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தினை தொடர்வதற்கும், முடிப்பதற்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் என்ற முறையிலும், தமாகா சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில், சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றால் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்தவிடால் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது.
எனவே, மேலும் தாமதம் இன்றி ஒன்றிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும். திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.