நபிகள் குறித்து சர்ச்சை கருத்து; நுபுர் ஷர்மாவுக்கு துப்பாக்கி லைசென்ஸ்.!

கடந்த 2022 மே மாதம் பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து நுபுர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தை ஆதரித்து டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டால் தனது ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டு நீக்கினார்.

அதேபோல் நுபுர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் டெலி என்பவர் கடந்த ஆண்டு ஜூன் 10ம் தேதி, சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து இருந்தார். அதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கன்னையா லால் மீது காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தனர். இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டுவதாகவும், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கன்னையா லால் காவல்துறையில் புகார் கூறி இருந்தார்.

இதனிடையே ஜூன் 28ம் தேதி தையல் கடையைத் திறந்து பணி செய்து கொண்டிருந்த கன்னையா லாலை இழுத்துத் தெருவில் போட்டு, அவரது தலையைத் துண்டித்துக் கொலை செய்த இருவர், அக்கொடூரச் செயலை ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவாக்கி பகிரங்கமாக வெளியிட்டனர்.

நுபுர் சர்மாவின் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், “தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா பேசியதை நாங்கள் கண்டோம். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்றுவேறு அடையாளப்படுத்தியுள்ளார். இது அவமானகரமானது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் ஆங்காங்கே முஸ்லிம் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்படி பல்வேறு கண்டனங்கள் எழுந்ததை அடுத்து பாஜகவில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக பா.ஜ.க-வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் தனது கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ட்விட்டரில் அறிக்கை மூலம் கூறியிருந்தார். அதோடு மத உணர்வுகளை புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் அதில் அவர் தெளிவு படுத்தினார். அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்திருந்தனர்.

இந்தச் சூழலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி வேண்டி நுபுர் ஷர்மா விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் இப்போது அவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், ‘‘நாங்கள் வழக்கப்படி இந்தமனுவைச் சரிபார்த்து விண்ணப்பதாரரின் குற்றப் பதிவுகளைப் பார்க்கிறோம். பின்னர், அவருடைய பின்னணியைச் சரிபார்க்கிறோம். எல்லாம் முடிந்ததும், நாங்கள் அச்சுறுத்தல்களைச் சரிபார்த்து உரிமம் வழங்குகிறோம். இப்போதைக்கு, அவர் பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்” என்று கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.