நுரையீரலில் சிக்கிய சோள துண்டுகள் – வெற்றிகரமாக வெளியே எடுத்த ரேலா மருத்துவமனை

சென்னை மகிந்திரா வேர்ல்டு சிட்டியைச் சேர்ந்த 55 வயதான நபர் ஒருவர் சோளத்தை படுத்துக் கொண்டே சாப்பிட்டதால் அது அவரது மூச்சுக் குழாய் வழியாக சென்று நுரையீரலில் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக அவருக்கு திடீரென இருமலும் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர்கள் ரேலா மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவர் உடனடியாக ரேலா மருத்துவமனைக்கு வந்தார். அங்கு வந்த அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் ப்ரோன்கோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வலது நுரையீரலின் வலது கீழ் மடல் அடிப்பகுதியில் சுமார் 3 செ.மீ அளவுள்ள சோளத் துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. 
 
இந்த நிலையில் நுரையீரல் நுண்துளையீட்டு ஆலோசகர்  டாக்டர் பென்ஹூர் ஜோயல் ஷட்ராக் தலைமையிலான நிபுணர்கள் குழு, அந்த சோளத் துண்டுகளை ப்ரோன்கோஸ்கோபிக் மூலம் ஜீரோ டிப் மீட்பு கூடையைக் கொண்டு அகற்ற முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. பின்னர் ப்ரோன்கோஸ்கோப் நுரையீரலுக்கு வாய் வழியாக செலுத்தப்பட்டு, வலது கீழ் மடலின் திறப்பில் இறுக்கமாக பொருத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீட்பு கூடை உள்ளே அனுப்பப்பட்டு அங்கிருந்த 2 சோளத் துண்டுகள் கூடையால் சுற்றி வளைக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு நுரையீரல் செயல்பாடு சீரானது. மேலும் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் அதே நாளில் அவர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
 
இது குறித்து நுரையீரல் நுண்துளையீட்டு ஆலோசகரும், தீவிர சிகிச்சை மருத்துவ நிபுணரும், மயக்க மருந்து நிபுணருமான டாக்டர் பென்ஹூர் ஜோயல் ஷட்ராக் கூறுகையில், ஏதேனும் பொருள் நுரையீரலில் சிக்கிக் கொண்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் அது மீண்டும் மீண்டும் இருமல், நிமோனியா மற்றும் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். 

இந்த நோயாளி அவரது நுரையீரலில் சோளத் துண்டுகள் சிக்கிய 3 நாட்களுக்கு பிறகு எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். இந்த நிலையில் அவரது மூச்சுக்குழாயில் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் அவரது சளி சவ்வில் சிறிய பாதிப்பு இருந்தது. எங்கள் மருத்துவமனை சரியான நேரத்தில் அளித்த சிகிச்சை மூலம் அவர் அன்றைய தினமே இயல்பு நிலைக்கு திரும்பினார் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.