மதுரை: புகையிலை பதுக்கியோருக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் கிளை, அரசு பள்ளிக்கு பர்னிச்சர் வாங்க ரூ.2.50 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தியதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார், விக்னேஸ்வரன் மற்றும் வினோத் கண்ணன் ஆகியோரை நாச்சியாபுரம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி இவர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘‘கைது செய்யப்பட்ட சரத்குமார், வினோத் கண்ணன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. விக்னேஷ்வரன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சரத்குமார் ரூ.1 லட்சம், வினோத் கண்ணன் தரப்பில் ரூ.1.50 லட்சத்தை, தேவகோட்டை தாலுகா வீரை ஊராட்சி காரிக்குடி கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்காக அதன் தலைமையாசிரியர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இந்தப் பணத்தை பள்ளிக்கு தேவையான பர்னிச்சர் பொருட்களை வாங்க வேண்டும். இதற்கான விபரங்களை சம்பந்தப்பட்ட போலீசில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.