புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை முன்னிலை வகித்த அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் ஜெ.சரவணக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது கரகாட்டம், தப்பாட்டம், கிராமிய நடனம், பம்பை உடுக்கை, பொய்க்கால் குதிரை, கட்டைக் கால் நடனம் போன்ற தமிழர்களின் பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதேபோல 2023-ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா சபை அறிவித்ததை நினைவுகூரும் வகையில், அனைவருக்கும் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு விருந்தாக பரிமாறப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை உறியடித்து பொங்கலை கொண்டாடினார்.
நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ”அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொங்கலை ஜி-20 பொங்கல் என்றே குறிப்பிடலாம். நமது நாடு பெருமை கொள்ளும் அளவிற்கு ஜி-20 மாநாட்டிற்கு நாம் தலைமை தாங்கப்போகிறோம். புதுச்சேரியில் இந்த மாநாடு 30, 31 தேதிகளில் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. அதற்கான இலட்சினையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம், அது மட்டுமல்லாமல் புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அத்தனை திட்டங்களும் கொண்டு வரப்படுகின்றன.
தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் விழாவாக இந்தப் பொங்கல் விழா அமைந்திருக்கிறது. துணைநிலை ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைகிறோம். வட இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகள்கூட நமது பாரம்பர்ய உடைகளில் வந்து அசத்தியிருக்கிறார்கள். இதைத்தான் எதிர்பார்க்கிறோம். எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றும்போது அதனால் மக்கள் பலன் பெறுவார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சி நமக்கு எடுத்துக்காட்டுகிறது. பால் விலை உயர்வு வலி தரக்கூடியதுதான். நமக்கு ஒப்புதல் இல்லாமலே நிர்வாகத்தில் சில நிகழ்வுகள் நடைபெறும்.
பால் விலை உயர்த்தியதில் எனக்கும் வருத்தம்தான். பொதுமக்களோடு எனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நிர்வாகம் விலை உயர்வை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. பாண்லே நிறுவனத்தை அழைத்துக் கூட்டம் போட்டிருந்தோம். புதுச்சேரியில் பொதுமக்களிடமிருந்தும், பால் முகவர்களிடமிருந்தும் கொள்முதல் செய்யும் அளவுக்கு, புதுச்சேரி பால் உற்பத்தியில் தன்னிறைவு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த முயற்சிக்குப் பிறகு விலையை ஏற்றக்கூடாது என்பது எனது கோரிக்கை. அனைத்து தாய்மார்களோடு நானும் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
பாரதப் பிரதமர் நேரடி வங்கி பணப்பரிமாற்றம் என்று குறிப்பிடுவது, மக்களுக்கு தேவையானவற்றை அவர்களே வாங்கிக் கொள்வார்கள் என்பதற்காகத்தான். ஒரு சிறிய தொகை கொடுத்து அவர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம். அதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நேரடி பணப்பரிமாற்றத்தில் உள்ள மிகப்பெரிய பலன் இதுதான். நாம் கொடுக்கின்ற பொருள் அவர்களுக்கு தேவை இல்லாததாகக்கூட இருக்கலாம். அவர்கள் விருப்பப்படும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற முழு உரிமை அவர்களுக்கு கொடுக்கிறோம் அதுதான் நேரடி பணப்பரிமாற்றம்.
அதனால் மக்கள் பலன் பெறுகிறார்கள். மக்கள் இதை விரும்புகிறார்கள். எந்த கோப்பும் என்னிடம் கிடப்பில் இல்லை. சில காரணங்களுக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயம். அதனால்தான் கொள்கைரீதியாக சில முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கிறது. நியாய விலைக் கடைகள் திறப்பு என்பது பல காலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எது எப்படி இருந்தாலும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சில உதவிகளை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
ஆளுநர் என்ற முறையில் மக்களுக்கு பலன் தரும் என்ற வகையில் ஒப்புதல் அளிக்கிறேன். வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு ரூ.1,000/- அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். முதலமைச்சர் அறிவித்ததற்கு நான் ஒப்புதல் கொடுத்திருக்கிறேன். சில நிர்வாக காரணங்களுக்காக சில விலைஏற்றங்கள் வரும்போது அதை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதில் மக்களுக்கு உதவி செய்கிறோம். நிர்வாகம் என்பது இரண்டையும் சமமாக நடத்திச் செல்ல வேண்டும்.
ஹாலோகிராம் மோசடியில் ஈடுபட்ட தனியார் சாராய வடிசாலை திறப்பு விவகாரத்தில் அரசு நஷ்டப்படும் அளவிற்கு இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியும். அபராத தொகைக்குப் பிறகு, பல நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கே பணிபுரிகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய பிறகுதான் வடிசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மக்கள் பலன் பெறும் அளவிற்குத்தான் புதுச்சேரியில் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.