சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக, அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக எம்.பி.க்கள் இன்று (ஜன. 12) குடியரசுத் தலைவரை சந்தித்து, மனு அளிக்க உள்ளனர்.
சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, சில பகுதிகளைத் தவிர்த்தார். மேலும் சில விஷயங்களை சேர்த்து வாசித்தார்.
ஆளுநருக்கு எதிராக…: இந்த நிகழ்வு பேரவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்ததுடன், ஆளுநர் உரையில் தவிர்த்தவற்றை சேர்த்தும், புதிதாக சேர்த்து வாசித்தவற்றை நீக்கியும், அரசால் அச்சடித்து வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையிலும் தீர்மானம் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் ஆலோசனை
பேரவையில் ஆளுநர் உரையாற்றிய விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதற்கிடையில் , கடந்த 9-ம் தேதி இரவு சட்ட நிபுணர்கள், திமுக சட்டப் பிரிவினர், மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவது என்று அப்போது முடிவெடுக்கப்பட் டது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்பதற்காக டெல்லி சென்றனர்.
பின்னர், குடியரசுத் தலை வரை சந்திக்க அனுமதி கிடைத்த நிலையில், இன்று காலை 11.45 மணிக்கு, தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் சந்தித்து, ஆளுநர் உரையாற்றியது தொடர்பான நிகழ்வுகள் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்க உள்ளனர்.