சென்னை: சட்டப்பேரவையில் அவை உரிமை மீறல் பிரச்சினை குறித்து, மன்னார்குடி தொகுதி உறுப்பினர் டிஆர்பி ராஜா நேற்று பேசியதாவது: பேரவையில் ஆளுநர் கடந்த 9-ம் தேதி உரையாற்றும்போது, பேரவைத் தலைவர் இருக்கைக்கு எதிரில் உள்ள பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த ஆளுநரின் விருந்தினர்களில் ஒருவர், பேரவை நடவடிக்கைகளை தனது கைபேசியில் பதிவு செய்தார்.
இதைப் பார்த்த நான், உடனடியாக பேரவைக் காவலரிடம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். பேரவையில் பார்வையாளர்கள் கைபேசி பயன்படுத்தக் கூடாது என்பது விதி. எனவே, இதை உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ‘‘மேலோட்டமாக பார்க்கும்போது, இதில் உரிமை மீறல் இருப்பதாக தெரிவதால், ஆழ்ந்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பேரவை உரிமைக் குழுவுக்கு அனுப்புகிறேன்’’ என்றார்.