பொங்கல்.. ஆளுநர் அதகளம்; 'பில்'லுக்காக அரசு வெயிட்டிங்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின்போது அரசு சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையில் தமிழ்நாடு, சமத்துவம், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வார்த்தைகளை விடுத்து ஆளுநர் உரையாற்றியது பேசுபொருளாக மாறியது.

இதற்கு திமுக கூட்டணிக்கட்சிகள் பல கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதில் ஒருப்படி மேலே போய் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் அறிவித்து உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவுக்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டு பலருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு இலச்சினை இடம் பெறவில்லை. மாறாக, மத்திய அரசின் இலச்சினை இருந்தது. இதற்கும் திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டனம் எழுந்தது.

அதே சமயம் கடந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு இலச்சினை இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முரணாக ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்களோ அல்லது திமுக எம்எல்ஏக்களோ யாரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

தமிழக முதல்வர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், ஆதினங்கள், விவசாயிகள், மதகுருமார்கள், பிஷப்கள் என சுமார் 2,000 பேருக்கு பொங்கல் பண்டிகை விழாவில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு விடுத்து இருந்தார்.

ஆனால் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேப்போல் பாஜக சார்பில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் பங்கேற்காத நிலையில் , ‘யாரு வந்தாலும்.. வராவிட்டாலும் கவலை இல்லை’ என்பது போல் ஆளுநர் அதகளம் செய்துவிட்டதாக பாஜக வட்டாரம் கிசுகிசுக்கிறது.

கடந்த முறை ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை‘டீ செலவு மிச்சம்’ என, கூறியது பெரும் சர்ச்சையானது.

இதற்கு, ‘பெட்ரோல், டீசல் செலவு மிச்சம்’ என எங்களாலும் சொல்ல முடியும் என்று விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநாவஸ் பதிலடி கொடுத்தார். இதற்கிடையே நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ‘ஆளூர் ஷாநாவஸ் சகோதரரே… இன்னொரு அம்சத்தை மறந்து விடாதீர்கள். இந்த தேநீர் விருந்தானது யாருடைய தனிப்பட்ட நிதியில் இருந்தும் வழங்கப்படுவதில்லை.

தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா? இல்லையா? என்பதை அறிய பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்’ என டிவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை எகிற விட்டு இருந்தார்.

அந்தவகையில் பார்க்க போனால் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்றைக்கு நடந்த பொங்கல் விழாவுக்கான செலவு தொகையையும் தமிழ்நாடு அரசே செலுத்தும் என்றே தெரிகிறது. கடந்த முறை அமைச்சர் பிடிஆர் சொன்னது போலவே இந்த முறையும் பில் வந்தால் தான் தெரியும் என, கூறப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.