‘மகரஜோதி’ தரிசன நாளான ஜனவரி 14 ஆம் தேதி ஐயப்பனுக்கு சார்த்தி அழகு பார்க்கும்’திருவாபரண’ ஊர்வலம் பந்தளத்தில் இருந்து சரண கோஷம் முழங்க இன்று புறப்படுகிறது.
மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பனுக்கு சார்த்தி அலங்கரித்து அழகுபார்க்கும் பந்தள மகராஜா வழங்கிய தங்க நகைகள் அடங்கிய ‘திருவாபரண’ ஊர்வலம் இன்று (ஜனவரி 12 ஆம் தேதி) மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதையடுத்து பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு, பந்தளம் தர்மசாஸ்தா கோவிலில் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஊர்வலமாக புறப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ள மூன்று பெட்டிகளும் பெருவழிப்பாதை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து திருவாபரண ஊர்வலம் பம்பை, சரங்கொத்தி வழியாக ஜனவரி 14 ஆம் தேதி சபரிமலை சன்னிதானம் வந்தடையும். இதையடுத்து ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மாலை 06.00 மணியில் இருந்து 06.30 மணிக்குள் மகா தீபாராதனை நடைபெறும்.
பந்தள மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பந்தள ராஜகுமாரனாக ஜொலிக்கும் ஐயப்பனுக்கு, தீபாரதனை காட்டும்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றும். அதே நேரம், பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். ஐயப்பன் ஜோதியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறான் என்பது ஐதீகமாக உள்ளது.
திருவாபரண ஊர்வலம் மற்றும் மகரஜோதி தரிசனத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. திருவாபரண ஊர்வலத்தை முன்னிட்டு பந்தளம் நகராட்சி பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ்.ஐயர் உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM