திருவொற்றியூர்: மாதவரம் சிஎம்டிஏ வாகன நிறுத்துமிட வளாகத்தில் தார்சாலைகள் முற்றிலும் சேதமாகி குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அதன்மீது செம்மண் கொட்டியுள்ளதால், வாகனங்கள் செல்லும்போது அப்பகுதி முழுவதிலும் மண் புழுதி பறக்கிறது. இதனால் அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை மாதவரம் மேம்பாலம் அருகே சிஎம்டிஏ-வுக்கு சொந்தமான கனரக வாகன நிறுத்த மையம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட தனியார் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுவதுடன், நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் இங்கு வந்து செல்கின்றன. சிஎம்டிஏ வாகன வளாகத்தில் உள்ள தார்சாலைகள் நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால் அங்கு சேதமான சாலையில் செம்மண் கொட்டி நிரவி வைத்துள்ளனர். இதனால் அந்த சாலைகள் வழியே லாரிகள் வந்து செல்லும்போது செம்மண் புழுதி பறக்கிறது. இதில் பல்வேறு லாரிகள் ராட்சத பள்ளங்களில் சிக்கி தடுமாறுகின்றன. அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்மீது செம்மண் புழுதி படர்வதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இங்கு செம்மண் புழுதி பறப்பதால், வடமாநில டிரைவர்கள் மற்றும் கிளினர்கள் சமையல் செய்ய முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இங்குள்ள மழைநீர் கால்வாய்களில் அடைப்பு உள்ளதால், சேதமான சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இங்கு இரவு நேரத்தில் தெருவிளக்குகளும் சரிவர எரிவதில்லை.
இதனால் இங்கு வழிப்பறி மற்றும் செயின், செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், இங்கு தங்கும் லாரி டிரைவர்கள், கிளினர்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர், கழிவறைகள்கூட இல்லை. இதனால் இப்பகுதியில் தங்கும் பலர் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், சேதமான சாலைகளை சீரமைத்து, அடிப்படை வசதிகளை உருவாக்க இதுவரை நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, சிஎம்டிஏ கனரக வாகன மையத்தில் சேதமான சாலையை சீரமைக்கவும் தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரவும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி டிரைவர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.