புதுடெல்லி: ராமர் பாலம் தொடர்பான வழக்கில் பலமுறை தெரிவித்தும் பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது. சேது சமுத்திர திட்டத்தின் போது இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும், அதனை புராதன சின்னமாக அறிவிக்கக்கோரியும் கடந்த 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியசுவாமி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஒன்றிய அரசு, சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலம் அகற்றப்படாது என உறுதியளித்து கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் பலமுறை கூறியும் இன்னும் ஏன் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என ஒன்றிய அரசுக்கு கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் அட்டார்னி ஜெனரல் துஷார் மேத்தா,‘‘இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்னும் எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது’’ என கூறினார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்ரமணிய சுவாமி, ஏற்கனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்டதாக சொல்லி இருந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு அதை மாற்றி சொல்கிறது. அதனால் இது அமைச்சரவை தொடர்பான விவகாரம் என்பதால் அமைச்சரவை செயலாளருக்கு நீதிமன்றம் சம்மன் வழங்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் சுப்ரமணிய சுவாமியின் கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி, இதுதொடர்பாக பிப்ரவரி முதல் வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தார்.