ராமேஸ்வரம்: `பாம்பன் பாலத்தில் இனி ரயில்கள் இயக்கப்படாதா?’ – ரயில்வே அதிகாரிகள் சொல்வது என்ன?!

தமிழ்நாட்டுடன் ராமேஸ்வரத்தை இணைக்கும் 108 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலம் 1914 -ம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை ராமேஸ்வரம் தீவிற்கும் மண்டபத்திற்கும் தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது. ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இந்தப் பாலத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வருவதால் ரயில்கள் மிக மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. பாம்பன் தூக்குப் பாலத்தை ரயில்கள் கடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை கண்டறிய, சென்னை ஐஐடி நிறுவன மாணவர்களால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் ரயில்வே பாலத்தில் சென்சார் கருவி பொருத்தப்பட்டது. புயல் எச்சரிக்கை எதிரொலியாக பாம்பன் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி அதிகாலை பாம்பன் பாலத்தில் ஐஐடி மாணவர்களால் பொருத்தப்பட்டு இருந்த சென்சார் கருவியில் இருந்து அபாய ஒலி கேட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாம்பன் பாலத்தின் வழியாக இயக்க இருந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது.

பாம்பன் பாலத்தில் அதிர்வுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது

பயணிகளின் வசதிக்காக மண்டபத்தில், இருந்து மதுரை வரை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பாம்பன் ரயில் பாலத்தில் சென்னை ஐஐடி நிறுவன மாணவர்களால் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவி ரயில்கள் ஓடும்போது பாலத்தில் அதிர்வுகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த 20 நாள்களாக ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஐஐடி நிறுவன மாணவர்கள் அதிர்வு எதனால் ஏற்பட்டது என தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அதிர்வுக்கான காரணம் குறித்து கண்டறிய முடியவில்லை. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என மதுரை கோட்ட தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில்களை விரைவாக இயக்கவும் அதன் மூலம் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும் பாம்பன் ரயில் பாலத்தை ஒட்டி நவீன புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து 2.05 கிமீ தூரத்திற்கு பாம்பன் கடலில் ரூபாய் 535 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானத்தை ரயில்வே துறையின் துணை அமைப்பான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் செய்து வருகிறது.

இதுவரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. புதிய பாலத்திற்காக கடலில் பல்வேறு கால நிலை சிரமங்களுக்கிடையே 101 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தூண்களில் 99 இணைப்பு கிர்டர்கள் அமைக்க வேண்டும். இதில் இதுவரை 76 இணைப்பு கிர்டர்கள் அமைக்கப்பட்டு ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கிர்டர் தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த மின்தூக்கி கிர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பழைய பாலத்தில் கப்பல் செல்வதற்காக பாலத்தின் நடுப்பகுதி இணைப்பை திறக்க இருபுறமும் மனித ஆற்றல் பயன்படுத்தப்பட்டு வந்தது‌ குறிப்பிடத்தக்கது. புதிய பாம்பன் பாலப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய பாலம் வருகிற மார்ச் மாதம் ரயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

இது தொடர்பாக ராமேஸ்வரம் ரயில் நிலைய அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், “பாம்பன் பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளைக் கடந்ததுவிட்டது. அதில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை கண்டறிந்து தற்காலிகமாக சீர் செய்து வந்தோம். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அதிர்வு எதிலிருந்து ஏற்பட்டது என்பதை கண்டறிவதில் சில சிரமங்கள் உருவாகியுள்ளது. பல ஆயிரம் மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. அதனால் பாம்பன் பழைய பாலத்தில் என்ன பிரச்னை என்பதை முழுமையாக கண்டறிந்த பிறகு தான் ரயில் போக்குவரத்து இயக்குவதற்கான சாத்திய கூறுகள் ஏற்படும். மேலும் புதிய பாலம் கட்டுமான பணி 92 சதவீதம் நிறைவடைந்து வருகிற மார்ச் மாதம் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே அதுவரை பழைய பாலத்தில் ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்கலாமா எனவும் ஆலோசனையில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.