தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.3.50 லட்சம் வரை தோன்ற விரக்தியில் இன்ஜினியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி அருகே தட்டப்பாறை ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவருக்கு மனைவி மற்றும் 5 மகன்கள். இதில் 5வது மகன் பாலன் (30). இன்ஜினியரிங் முடித்த இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சரிவர வேலைக்கு செல்லாத இவர், ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கத்திற்கு ஆளானார். இந்நிலையில் நேற்று காலை அவர், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதோடு பாலனின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில், பாலன் தனது நண்பர் ஒருவருக்கு அதிகாலை 5.30 மணிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த எஸ்.எம்.எஸ். டெலிவரி ஆகாத நிலையில் இருந்து உள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்ததில் ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.3 லட்சம் வரையில் தோற்றுப் போயுள்ளார். பாலனிடம் நேற்று முன்தினம் அவரது தந்தை ரூ.50 ஆயிரம் கொடுத்து அவரது வங்கி கணக்கில் செலுத்த கூறி உள்ளார்.
ஆனால் பாலன், அந்த பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை ஆன்லைன் ரம்மி விளையாடி அந்த பணத்தையும் இழந்து உள்ளார். இதனால் மனமுடைந்து அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று விட்டேன், ‘என் முடிவை நானே தேடிக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்ப முயற்சித்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் தோற்றதால் நெல்லை மாவட்டம் பணகுடி ரகுநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் சிவன்ராஜ் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று தூத்துக்குடி அருகே இன்ஜீனியர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டார். 2 நாளில் 2 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* ஆளுநருக்கு வலுக்கும் கண்டனம்
தமிழ்நாடு சட்.டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காததால் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் நிர்கதியாக நிற்கின்றன. இதை குறித்து அக்கறை காட்டாமல் அரசியல் செய்வதில் மட்டுமே ஆளுநரும், ஒன்றிய அரசும் செயல்பட்டு வருகிறது என தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இனிமேலும் தற்கொலைகள் தொடாரமல் இருக்க மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.