'வம்பு வளர்ப்பதற்காகவே..!' – ஆளுநர் ஆர்.என்.ரவியை சாடிய கி.வீரமணி

திட்டமிட்ட பின்னணியோடு வம்பு வளர்ப்பதற்காகவே பொங்கல் விழாவை ஏற்பாடு செய்த ஆளுநர் ரவி, அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் லச்சினையான கோபுரச் சின்னத்தை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசினைப் புறக்கணித்து உள்ளார் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

மத்திய அரசு என்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு என்று கூறுவது கூடாது என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என்.ரவி. எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை. யூனியன் கவர்மென்ட் என்ற சொல்லுக்குச் சரியான தமிழ் மொழி பெயர்ப்பு ‘ஒன்றிய அரசு’ என்பதே! ‘மத்திய அரசு’ என்ற சொல், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பூர்வ சொல் அல்ல. ஆட்சிகளின் அதிகாரப் பகுப்புகளுக்கு மூன்று பட்டியல்களின் தலைப்பு என்ன?

ஆளுநர் அரசியலமைப்புச் சட்ட வரலாற்றை புரிந்து கொள்ளத் தவறக் கூடாது. அரசமைப்புச் சட்டம் இயற்றிய அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது, மத்திய அரசு என்ற சொல்லுக்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற சொற்றொடரைப் போடவேண்டும். காரணம் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் என்றால் ‘மத்திய அதிகாரக் குவிப்பு’ என்ற பொருள் வந்துவிடக்கூடும். அதைத் தவிர்க்கவே ‘ஒன்றிய அரசு’ சொல்லாக்கம் இடம் பெற்றது.

திட்டமிட்ட பின்னணியோடு வம்பு வளர்ப்பதற்காகவே பொங்கல் விழாவை ஏற்பாடு செய்த ஆளுநர் ரவி, அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் லச்சினையான கோபுரச் சின்னத்தை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசினைப் புறக்கணித்து உள்ளார். இவர் எங்கே கவர்னர்? தமிழ்நாட்டுக்குத் தானே. இவர் எந்த அரசின் நிதியிலிருந்து ஊதியம் வாங்குகிறார்? எங்கே குடியிருக்கிறார்? டெல்லியிலா? அதுமட்டுமா யூனியன் லிஸ்ட் ஒன்றிய அரசு பட்டியல் என்று தான் குறிப்பிட்டுள்ளது. சென்ட்ரல் லிஸ்ட் என்று அல்ல என்பதை ஆளுநர் படித்துப் புரிந்து கொள்ளட்டும்.

ஒன்றியம் என்றால், அவருக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் பஞ்சாயத்து யூனியன் என்ற சொல்லை நினைத்துக் கொண்டு பாடத்தைத் தவறாகச் சொல்லிக் கொடுத்து, இவரும் அது புரியாமல் இப்படி குறுக்குச்சால் ஓட்டுகிறார். இவர் இப்போது பிரசாரம் செய்யும் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்க கர்த்தாவான எம்.எஸ்.கோல் வால்கர் பஞ்ச் ஆப் தாக்ட்ஸ் நூலில் ‘ஞானகங்கை’ என்ற தலைப்பிட்டு, வெளியிடப்பட்டிருப்பதிலே ”ஒன்றிய அரசு” என்ற சொல் முன்பே இடம் பெற்றுள்ளது. அதுவும் பிரிவினை எண்ணத்தோடு தானா?

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.